Muralitharan K
Muralitharan K

@muralijourno

15 تغريدة 112 قراءة Apr 16, 2023
2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய "Journey of a Civilization: Indus to Vaigai" நூல் வெளியானபோது தொல்லியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. The Hindu, Outlook, Frontline, Harappa.com உள்ளிட்ட ஊடகங்களில் இதற்கான மதிப்புரைகள் வெளிவந்தன. (1/15)
Royal Asiatic Societyயின் ஆய்விதழ் இந்தப் புத்தகம் குறித்து விரிவான மதிப்புரையை வழங்கியது. அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள், இந்நூல் குறித்து உயர்ந்த கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இப்போது இந்த நூல் தமிழில் வெளிவந்துள்ளது. ஆர். பாலகிருஷ்ணனே இதனைத் தமிழிலும் எழுதியுள்ளார். (2/15)
இது ஒரு மொழிபெயர்ப்பு நூலல்ல. தமிழிலும் எழுதப்பட்ட நூல் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிந்துவெளிக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புதிர்தான் இந்த நூலின் அடிப்படை. சிந்துவெளி கண்டறியப்பட்ட காலத்திலிருந்தே இந்த புதிர் ஆய்வாளர்களை தொடர்ந்து ஆட்கொண்டிருக்கிறது. (3/15)
இந்த நிலையில், தொடர்ந்து நடந்துவரும் அகழாய்வுகளும் மரபணுவியல் ஆய்வுகளும் சிந்துவெளி அறிஞர்களை திராவிடக் கருதுகோள் குறித்தே நகர்த்துகின்றன. சிந்துவெளி அறிஞரான ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாடு என்பது திராவிடப் பண்பாடுதான் என்று உறுதிபடக் கூறியிருந்தாலும்... (4/15)
அதனைப் பல்வேறு வகைகளில் நிரூபிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதில் ஒரு முக்கியமான முயற்சிதான் இந்த நூல்.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் இடப் பெயர்கள், பண்டைய தமிழ் - சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் இடப்பெயர்கள் ஆகியவற்றின்... (5/15)
பல்வேறு கூறுகளை ஒருங்கிணைத்து, சிந்துச் சமவெளி - திராவிடம் என்ற கருதுகோளுக்கு வலுச்சேர்த்திருக்கிறார் பாலகிருஷ்ணன்.
ஆங்கில நூலைப் போலவே, பெரிய சதுர வடிவில் சுமார் 625 பக்கங்களுடன் நல்ல அச்சுத் தரத்துடன் பல்வண்ணத்தில் வெளியாயிருக்கிறது இந்த நூல். மொத்தம் 17 அத்தியாயங்கள். (6/15)
மனித பயணத்தின் தொடக்கம் எப்படி இருந்தது, உலகின் பண்டைய பண்பாடுகள் எப்படி இருந்தன, சிந்துவெளிப் பண்பாட்டிற்கு இருந்த திராவிட அடித்தளம், பழங்காலத் தமிழகமும் பழந்தமிழ் இலக்கியங்களும் காட்டும் நிலப்பரப்பு, பானைகளின் கறுப்பு - சிவப்பு வண்ணம் எப்படி திராவிடப் பின்னணியை... (7/15)
குறிக்கிறது, விளையாட்டுகளில் சிந்துவெளிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள் என ஒரு மிக விரிவான ஆய்வு நூல் இது.
ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' நூலின் அடுத்த கட்டமாகவும் இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடியும். (8/15)
திராவிட இடப்பெயர்கள் எப்படி கால இடைவெளியைக் கடந்து இன்றும் நிலைத்து நிற்கின்றன என்பதையும் சிந்துவெளிப் பகுதிகளில் எப்படி கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற பெயர்கள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி, சிந்துவெளி - திராவிடப் புதிரை விடுவிக்க முயல்கிறார் பாலகிருஷ்ணன். (9/15)
அதாவது, புலம்பெயரும் மக்கள், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும் இடப்பெயர்களை தங்களது புதிய வாழிடங்களுக்கு எடுத்துச் சென்று மீண்டும் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் அவர். சிந்து நதிக் கரைக்கும் வைகை நதிக் கரைக்கும் இடையில் உள்ள தொடர்பை வலியுறுத்த... (10/15)
பானைத் தடம் என்ற புதிய கருத்தியலையும் அவர் அறிமுகப்படுத்துகிறார்.
இதுதவிர, சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் சங்ககால இலக்கியப் பரப்புக்கும் இடையிலான இணக்கத்தையும் ஆதாரங்களுடன் முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன். அதாவது, சங்ககாலத்திற்கு நெடுங்காலம் முற்பட்ட மீள் நினைவுகளும்... (11/15)
அனுபவங்களும் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளன என்கிறார் அவர்.
வேறு சில சுவாரஸ்யமான கேள்விகளையும் எழுப்பி, அவற்றுக்கு தெளிவான பதில்களை அளிக்க முற்படுகிறார் பாலகிருஷ்ணன். உதாரணமாக, திராவிட மொழி பேசியவர்களும் சங்க காலத் தமிழர்களின் மூதாதையர்களும்... (12/15)
இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்தார்களா, சிந்துவெளி நாகரீகம் நலித்த பிறகான இந்தியா குறித்த மிகச் சிறந்த ஆவணம் சங்க இலக்கியங்களே, ஆரியர்கள் பற்றி திராவிடர்கள் என்ன நினைத்தார்கள், திராவிடர்கள் பற்றி ஆரியர்கள் என்ன நினைத்தார்கள்... (13/15)
வேதப் பண்பாட்டிற்கும் சங்கத் தமிழ் பண்பாட்டிற்கும் இடையில் என்ன ஒற்றுமை - வேற்றுமைகள் இருந்தன, ஊர் என்ற திராவிடச் சொல்லின் முக்கியத்துவம் என்ன என்பது போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த நூல்.
(14/15)
திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரா என்ற இரு அத்தியாயங்களும் இந்தப் புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான பகுதிகள்.
ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 3,350/-
(15/15)

جاري تحميل الاقتراحات...